தென்காசி:செங்கோட்டை கே.சி.ரோடு பகுதியைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி இசக்கி சங்கர் (24). இவர் வேலைக்குச் சென்று விட்டு இரவு நேரத்தில் தனது அப்பாச்சி பைக்கை வீட்டிற்கு வெளிப்புறம் நிறுத்தியுள்ளார். பின்னர் அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் காணாமல் போய் உள்ளது.
பின்னர் அதிர்ச்சி அடைந்த இசக்கி சங்கர், காணாமல் போன பைக் குறித்து செங்கோட்டைக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற அதே தினம், தென்காசி பகுதியிலும் அதே போன்று ஒரு அப்பாச்சி பைக் திருடு போனதாகத் தென்காசி காவல் நிலையத்தில் புகார் பதிவானது.
அதனைத் தொடர்ந்து, தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், தென்காசி நகர பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் அந்த நபர் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாரதிசங்கர் என்கிற கிசா சங்கர் என்பதும், அவன் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் அப்பாச்சி ரக பைக்குக்களை மட்டும் குறிவைத்து திருட்டியதும் தெரியவந்ததுள்ளது. இது குறித்து அப்பாச்சி பைக் திருடரிடம் விசாரித்த போது, அப்பாச்சி மோட்டார் சைக்கிளை எளிதாக ஸ்டார்ட் செய்துவிடலாம் என்பதால் தான் அப்பாச்சி பைக்குக்களை குறிவைத்துத் திருடியதாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அவர் மீது ராஜபாளையம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பாரதிசங்கரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த இரண்டு விலை உயர்ந்த அப்பாச்சி பைக்குக்களை பறிமுதல் செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தென்காசி மாவட்ட காவல்துறையினர், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திருட்டுப் போன வாகனங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகரித்து, சட்ட விரோத செயல்களைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மணல் குவாரிகளில் அரங்கேறும் முறைகேடுகள்.. நாமக்கல் மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை!