குற்றாலத்தில் 42 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் - தொடர் புகார்களால் அதிரடி! தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் , ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலங்கள் சாரல் மழைப்பொழியும் காலமாகும். இதன் காரணமாக இங்கு உள்ள அருவிகளில் குளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்தாண்டும் பல சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து, அங்குள்ள இயற்கை வளங்களைக் கண்டும் அருவிகளில் குளித்தும் அங்குள்ள உணவுகளை உண்டும் மகிழ்ச்சியடைகின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதால், ஹோட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படுகின்றன என குற்றலாத்தில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் இலஞ்சியில் இருந்து குற்றாலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் கெட்டுப்போன மற்றும் உண்ண தகுதியற்ற உணவுகள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்வ நாகரத்தினம் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு தேர்தல் - திமுக உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு!
ஆய்வில் விற்பனைக்காக சுமார் 42 கிலோ அளவிலான உண்ன தகுதியற்ற நிலையில் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சிக்கன், மீன், இறால், ரைஸ், நூடுல்ஸ் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றை அந்த இடத்திலேயே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.
மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஹோட்டல்களை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைப் போன்று கடந்த ஜூலை 22ம் தேதி ஹோட்டலில் சிக்கன், மீன்களுக்கு அளவுக்கு மீறி அதிக நிறங்களை சேர்த்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் 25 கிலோவிற்கு மேலாக இறைச்சிகளை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால் தரமற்ற உணவு வழங்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றாலத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் சாப்பிடும்போது தரமான உணவா என சோதித்து பார்த்து சாப்பிட வேண்டும் எனவும்; உணவு தரமான முறையில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும்; இறைச்சியும் தரமான முறையில் வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:தஞ்சையில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாமில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!