தென்காசி: பொது பள்ளிகளுக்கான மாநில மேடை சார்பில் 'சாதி எனும் தாழ்ந்த படி நமக்கெல்லாம் தள்ளுபடி' என்ற தலைப்பில் கல்வி கருத்தரங்கம், மேலகரம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ரத்தின சபாபதி, முனைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
மேலும், ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் சாதி ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து 'சாதி ஒழிப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையில்' என்ற நூல் வெளியிடப்பட்டது. குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் சாதிய ரீதியான உணர்வு மற்றும் சாதிய வன்மம் மேலோங்க காரணம் என்ன என்பது குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
மேலும், இந்த கருத்தரங்கில் பங்கேற்ற பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சாதி மனித குலத்தின் அவமானம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வும், வன்மமும் அதிக அளவில் காணப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று. பாகுபாடு உள்ள சமூகத்தில் இருந்து, பள்ளிக்கூடத்தில் பயில வரும் குழந்தை, தனது படிப்பை முடித்து வெளியே செல்லும்போது பாகுபாடை களைவதற்கான தெளிவே பள்ளிக் கல்வியின் அடிப்படை நோக்கம்.