தென்காசி: சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வெறி நாய்கள் மற்றும் தெரு நாய்கள் தொல்லையால் பெரியவர்கள், சிறியவர்கள் எனப் பலர் தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து நாய்களால் கடிபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்த பின்பும் சாலைகளில் மக்கள் நாய்களின் தொல்லையால் அச்சத்துடனேயே நடந்து செல்வதாகவும் சிறுவர்கள் பள்ளிக்குச் சென்று தனியாக வீடு திரும்பும் போதும்; நாய்களின் கடிக்கு ஆளாவதாகவும் கூறுகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாசுதேவநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாறைப்பட்டி கிராமத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த ஏழு பேரை வெறிநாய் கடித்தது தொடர்ந்து, சங்கரன்கோவிலில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிகள் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்திற்கு வெறி நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, அதன் தாக்கத்திலிருந்து மக்களை விடுபடச் செய்து மக்கள் சாலைகளில் செல்லும்போது அச்சம் இல்லாமல் செல்ல வேண்டும் என்பது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்குத் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொலைக்காட்சியில் இது சம்பந்தமான செய்தி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இன்று காலை அதே போல் நகராட்சி நிர்வாகம் நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்டபோது, அங்கு வந்த நபர் 'ப்ளூ கிராஸிலிருந்து வருகிறேன், தான் விலங்குகள் பாதுகாப்புச் சட்ட பிரிவு அதிகாரி எனவும்; நாய்களை எதற்காகப் பிடிக்கிறீர்கள்; நகராட்சி நிர்வாகம் அதற்கான ஆர்டர் காப்பி என்னிடம் காண்பிக்க வேண்டும்' எனவும் ஊழியர்களை மிரட்டி உள்ளார்.