அமைச்சர் சேகர்பாபுவின் அரசு வாகனத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வலம் வரும் வீடியோ தென்காசி:தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று (பிப்.9) இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்திருந்தார். அப்போது, அவருடன் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா உள்ளிட்ட ஏராளமான கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபுவின் அரசு காரில் சட்டமன்ற உறுப்பினரான ராஜா, முன் இருக்கையில் அமர்ந்து கையெடுத்துக் கும்பிடுவது போன்ற வீடியோவை, விக்ரம் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘நாயகன் மீண்டும் வரான்’ என்ற பாடலோடு எடிட் செய்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனங்களை, அவர்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என விதிமுறைகள் உள்ளது. இருப்பினும், அமைச்சர் சேகர்பாபுவின் அரசு வாகனத்தை ஒரு எம்எல்ஏ பயன்படுத்தியது மட்டுமில்லாமல், அதை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு வீடு கட்டிக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரை மிரட்டியது, கோயில் திருவிழாவில் நடந்த கறி விருந்தில் பா.ஜ.க பிரமுகரைத் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு தொடர் சர்ச்சைகளில் எம்எல்ஏ ராஜா சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. நாசர் மகன் நீக்கத்திற்கு காரணம் இது தான்..