அரசு மருத்துவமனையில் தலை காயத்திற்கு தையல் போட்ட தூய்மை பணியாளர் தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை, மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய மருத்துவமனையாகும். இங்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மருத்துவர்கள் பணிக்கு சரிவர வருவதில்லை எனவும், தரமற்ற சிகிச்சை வழங்கப்படுவதாகவும் பல வருட காலமாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நேற்று (செப்29) காலை தலையில் அடிபட்டு காயம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வந்த ஒருவர், பணி மருத்துவரை சந்தித்ததாகவும், அவரை பரிசோதித்த மருத்துவர், அங்குள்ள தூய்மைப் பணியாளர் ஒருவரை அழைத்து, நோயாளிக்கு தையல் போட சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அந்த தூய்மைப் பணியாளர், நோயாளிக்கு எந்தவித வலி நிவாரணி கொடுக்காமலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் அலட்சியமாக தையல் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வலி நிவாரணி கொடுக்காமல் தையல் போடும்போது, அந்த நோயாளி வலியால் அலறி துடிப்பது பார்ப்போர் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Ambattur AC Fire : ஏசி இயந்திரத்தில் தீ விபத்து! நள்ளிரவில் பறிபோன தாய், மகள் உயிர்!