கரோனா ஊரடங்கு: குற்றாலத்தில் ரூ. 4 கோடி வருவாய் இழப்பு - கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
தென்காசி: கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக குற்றால பேரூராட்சிக்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு படிப்படியாக 6 மாதங்களாக நீட்டிக்கப்பட்டு தற்போதுவரை அமலில் இருக்கிறது.
ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தற்போதுவரை சுற்றுலா தளத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சீசன் காலகட்டமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி பழங்கள், மூலிகை, துணி கடைகளை ஏராளமான வியாபாரிகள் அமைப்பார்கள். தற்போது தடை உத்தரவு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி குற்றால அருவிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதன் காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகளில் உள்ள கார் பார்க்கிங் கட்டணம் வசூல் உரிமம், கடை வாடகை வசூல் உரிமம், கட்டண கழிப்பிடம், உடை மாற்றும் அறை உள்ளிட்டவைகள் வாயிலாக கிடைக்கக்கூடிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் குற்றால பேரூராட்சி நிர்வாகத்திற்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் வீரபாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.