தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர், குண்டாறு அணைப்பகுதிக்குச் செல்வது வழக்கம். மேலும், குற்றாலம் மட்டுமல்லாமல் பிற இடங்களில் ஏராளமான அணைக்கட்டுகளும், தனியார் நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மேலும், இந்த தனியார் நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்ல சில மாதங்களுக்கு முன்பாக தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில நீர்வீழ்ச்சிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டது. தற்பொழுது அதனுடைய வழித்தடங்களும், அதிரடியாக மூடப்பட்டுள்ளது.
மேலும், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குண்டாறு பகுதியில் சீசன் காலகட்டங்களில் தனியார் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு ஒரு சில சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டும் நிலையில், அவர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி, பல்வேறு விதமான இடங்களில் உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு, வாகன ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகளைக் கட்டாயப்படுத்தி தன்னுடைய வாகனத்தில் (jeep) அழைத்து சென்று வருவது வழக்கம், அவ்வாறு செல்வதற்கு அதிகமாகக் கட்டணத்தை வசூலித்தும், அவர்கள் செல்லும் போது வாகனத்தை அதிவேகமாக இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.
மேலும், விவசாய பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த தண்ணீரில் சிலர் தடுப்பணை போன்ற கட்டுமானங்களைக் கட்டி, தனியார் நீர்வீழ்ச்சி என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளைக் குளிக்க வைப்பதால் விவசாயத்திற்குப் பயன்படும் நீரானது மாசடைந்து வருவதாகவும், இதனால் பயிர்கள் சேதம் அடைவதாகவும் விவசாயிகள் தரப்பில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தனர்.