தென்காசி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்து ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தியது அதிமுகவினரிடையே கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் திமுகவினரை கடுமையாகத் தாக்கியதோடு, உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அவரது நாக்கை வெட்ட வேண்டும் என கடுமையாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜலட்சுமி, பெண்களை இழிவுபடுத்தி பேசும் திமுகவினரை வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றவர், மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்பேரில் மாவட்ட ஆட்சியரும், உத்தரவின்படி வருவாய் மற்றும் வேளாண்மைத் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கிட்டு வருகின்றனர், விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மழை நீரில் மூழ்கி முளைவிடத் தொடங்கிய மானாவாரி பயிர்கள்: விவசாயிகள் வேதனை!