தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (பிப்.28) காரில் இருந்தவாறே அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களிடையே பரப்புரை செய்தார்.
ராகுல் காந்தியின் பரப்புரைப் பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மொழிப்பெயர்த்து மக்களுக்கு தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், “பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாசாரம் எனப் பேசிக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் மீது கிஞ்சிற்றும் அக்கறை இல்லாமல் செயல்படுகிறார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இயக்குவது போல் தமிழர்களையும் பிரதமர் மோடி இயக்க நினைக்கிறார். விரைவில் அந்த ரிமோட் உள்ளே இருக்கும் பேட்டரியை மக்கள் எடுத்து வீசப் போகிறார்கள் என்பது மோடிக்கு தெரியவில்லை. இதை மோடியும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது நான் எனது ஆசை” என்றார்.