தென்காசி:குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வள்ளியூர் என்கின்ற பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இந்த வழியாக செல்லும் பேருந்துகள் ஏதும் வள்ளியூர் பகுதியில் நிற்காமல் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்ததாகவும் இருந்த போதும், போக்குவரத்து துறை அதிகாரிகள் வள்ளியூர் பகுதியில் பேருந்தை நிறுத்தி செல்ல எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று (அக். 28) தெற்குமேடு பகுதியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற (வழித்தட எண்: 31 பி) அரசு பேருந்தையும், அதே வழித்தடத்தில் மறுமார்க்கமாக வந்து கொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்தையும் சிறைபிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே, தனது வீட்டில் இருந்து அந்த வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டு இருந்த மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனின் வாகனமும், பொதுமக்கள் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.