தென்காசி மாவட்டத்தில், இதுவரை 26 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக; தென்காசி, புளியங்குடி, நன்னகரம் ஆகியப் பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்குத் தான் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் சமய மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 9 பேர் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள, தனது உறவினர் ஒருவரின் சாவு வீட்டிற்குச் சென்று விட்டு வீடு திரும்பினார். ஆலங்குளம் அடுத்த அத்தியூத்து வழியாக அவர்கள் வந்தபோது காவல் துறையினர், அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
திருநெல்வேலியில் மேலப்பாளையம் பகுதியில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ஹாட் ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒன்பது பேரும் மேலப்பாளையம் சென்றுவிட்டு வீடு திரும்பியதால், பாதுகாப்புக் கருதி அவர்களை வீட்டிற்குச் செல்லவிடாமல் அருகில் உள்ள தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் காவல் துறையினர் தங்க வைத்துள்ளனர்.
இந்த தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள், கல்லூரி விடுதி முன் ஒன்றுகூடி 9 பேரையும் தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதன் மூலம் தங்கள் பகுதியில் கரோனா பரவிவிடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.