தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி சிற்றருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் உள்ளன.
இதில் வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள செண்பகாதேவி அருவியின் அருகில் மிகவும் பழமைவாய்ந்த செண்பக தேவியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும், உள் மாவட்டங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
பௌர்ணமி காலங்களில் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள், ஒருநாள் இரவு தங்கி, பொங்கல் பொங்கி, அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டுச் செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடைபோடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில் தமிழ்நாடு அரசு கோயில்களைத் திறக்க அனுமதியளித்துள்ளது.