தென்காசி:குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள, குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று (ஆகஸ்ட் 25) தீ விபத்தில் சிக்கி முழுவதுமாக எரிந்து நாசமாகிய நிலையில், இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது தீயானது முற்றிலும் அணைக்கப்பட்டுள்ள சூழலில், தீ விபத்து நடைபெற்ற இடத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, தீ விபத்தில் சேதம் அடைந்த கடையின் உரிமையாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், அவர்கள் அடைந்துள்ள நஷ்டம் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, “தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் சுற்றுப்புற மதில் சுவர் அருகே கடைகள் அமைக்க அனுமதி கொடுத்தது தவறு எனவும், பல்வேறு சட்ட விதிமுறைகளை மீறி இது போன்ற அனுமதியை கோயில் நிர்வாகம் கொடுத்ததால் தான் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பும் இதே போல விபத்து நடந்துள்ளது , அதை கண்டுகொள்ளாமல் விதிகளை மீறி கடைகளை அமைத்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க கோயிலின் சுவர்களே இடிந்து விழும் சூழலில் இருக்கிறது. குற்றால சீசன் என்பதால் பலர் வந்து செல்கின்றனர். நல்லபடியாக நேற்று எந்த வித உயிர்ச்சேதமும் நடக்கவில்லை.