மேட்டூர்:தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின் கீழ் வெய்காலிப்பட்டி, மேட்டூர், ஆசீர்வாதபுரம், கானாவூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் மேட்டூரின் ஒரு பகுதியை சபரிநகர் என்று பெயர் மாற்றம் செய்ய, திமுக ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஊராட்சி செயலர் மூலம் மேட்டூர் பகுதிக்கு சபரிநகர் என்று வீட்டு தீர்வை ரசீது தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து மேட்டூர் கிராம பொதுமக்கள் நேற்று (மார்ச் 22) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 23) வீடுகள், கடைகள், தெருக்களில் கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தங்கள் ஊரின் பெயரை மாற்றக் கூடாது என்றும், திமுக ஊராட்சி தலைவர் பொன்ஷீலாவை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிரடிப்படை காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மேட்டூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.