தென்காசி: ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சீதாராம்(85) மற்றும் சண்முக வடிவு (78). இத்தம்பதிக்கு 4 மகன்கள் இருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்து விட்டார். ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் இது வரை வீடு திரும்பவில்லை. உயிரிழந்த மகனுக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு தனது மகன்கள் கடல்மணிராஜா மற்றும் செல்லப்பாண்டி ஆகியோருக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்தனர். தனது விவசாயம் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து இறந்து போன தனது மகனின் 7 குழந்தைகளுக்காக செலவு செய்து வந்துள்ளனர்.
15 கோடி ரூபாய் அளவுக்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருக்கும் கடல்மணிராஜா என்ற மகனுக்கு முதியவரின் இந்த செயல் பிடிக்காததால் 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குளத்தில் இருந்து பெற்றோரை வந்து சந்திப்பதையும் அவர்களைப் பராமரிப்பதையும் விட்டு விட்டார். மற்றொரு மகன் செல்லப்பாண்டி தொழில் நிமித்தமாக பாளையங்கோட்டையில் வசிப்பதால் அவரும் பெற்றோரை கவனிக்கவில்லை.
இதனால் முதியவர் சீதாராம், தனது மனைவி மற்றும் இறந்து போன மகனின் 7 குழந்தைகள் ஆகியோரைப் பாரமரிக்க மிகவும் சிரமப்பட்டார். சொத்துக்களை எழுதி வைத்த தனது இரு மகன்களையும் உதவிக்கு அழைத்தும் அவர்கள் வரவில்லை. இதனால், தான் எழுதிக் கொடுத்த சொத்துக்களை தனக்குத் திரும்ப அளிக்குமாறு கோரியும் அவர்கள் கொடுக்கவில்லை.