அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதல் தென்காசி: சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிக பேருந்து நிலையம் திருவேங்கடம் சாலை மற்றும் கழுகுமலை இணைப்புச் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து நவம்பர் 22ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு கிளம்ப தயாராக இருந்தது.
அதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து 5.25 மணிக்கு கிளம்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது. 5.15 மணிக்கு அரசு பேருந்தை எடுத்த ஓட்டுநர் செந்தட்டியாபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் பேருந்தில் பயணிக்க வந்ததால் அவரை ஏற்றுவதற்காக பேருந்தை நிறுத்தி உள்ளார்.
அப்போது தனியார் பேருந்து ஓட்டுநர் பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் அரசு பேருந்துக்கு முன்பாக அவரது பேருந்தை எடுத்து சென்று நிறுத்தி குறிப்பிட்ட நேரம் கடந்தும் கிளம்பாமல் இருப்பதாக அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அரசு பேருந்து ஓட்டுநர் ஏற்கனவே இதய நோயாளி என்றும், தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கியதால் அரசு பேருந்து ஓட்டுநர் குமார் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அரசு போக்குவரத்து பணியாளர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மற்ற அரசு பேருந்துகளை பேருந்து நிலையத்தில் இருந்து எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சங்கரன்கோவில் பணிமனை கிளை மேலாளர் குமார், சங்கரன்கோவில் டவுன் ஆய்வாளர் சண்முகவடிவு, போக்குவரத்து ஆய்வாளர் சந்தனராஜன், தொமுச நிர்வாகிகள் போக்குவரத்து பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர் ராமர் விசாரணைக்காக சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து அரசு பேருந்து பணியாளர்கள் பேருந்துகளை மீண்டும் இயக்கத் தொடங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் கூறியதாவது, "தனியார் பேருந்துகள் இது போன்று நேரத்தை முழுமையாக பின்பற்றாமல் இவ்வாறு செய்வது தொடர் கதையாக உள்ளதாகவும், மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் அதிகப்படியான போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த குடும்பத்துக்கு நீதி கிடைப்பதில் தாமதமா? உறவினர் ஆட்சியரிடம் மனு..!