தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேமரா முன்பே கோவில் உண்டியல் காணிக்கையில் கை வைத்த இரு பெண்கள் - அதிர்ச்சி சம்பவம்!

தென்காசியில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, கண்காணிப்பு கேமரா முன்னிலையிலேயே காணிக்கை பணத்தை திருடிய இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

police arrested
கேமரா

By

Published : May 30, 2023, 7:56 PM IST

தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள். நல்லூர், பொய்கைமேடு, நடுவக்குறிச்சி, திருவேங்கடம், மேல்நீதிநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், தினந்தோறும் சங்கர நாராயணன் திருக்கோவிலுக்கு வருவது வழக்கம்.

இக்கோவிலில் அண்மையில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சங்கர நாராயணர் கோவிலில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இக்கோயிலில் மாதம் ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. கோயிலின் அனைத்து உண்டியல்களிலும் பக்தர்களால் போடப்படும் காணிக்கை பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் எண்ணப்படுகின்றன. பல்வேறு அறக்கட்டளை மற்றும் சேவா சங்கத்தினர் இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதையும் படிங்க: பழனி உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது தங்க‌நகைகளைத் திருடிய பெண் ஊழியர் கைது!

இந்நிலையில் இந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அரங்கம் முழுவதும் சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதேபோல், நேரலையிலும் ஒரு கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

அப்போது, காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் பணத்தை திருடி தங்களது ஆடைக்குள் ஒளித்து வைத்தனர். இந்த காட்சியை கண்காணிப்பு கேமராவில் பார்த்த கோயில் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பணத்தை திருடிய சிவகாசி பகுதியைச் சேர்ந்த லட்சுமி, கலா ஆகிய இரண்டு பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் அரங்கம் முழுவதும் சிசிடிவி கேமரா மற்றும் நேரலை கேமரா வைக்கப்பட்டிருந்த நிலையிலும் இரண்டு பெண்கள் பணத்தை திருடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டு பழனி முருகன் கோயிலில் ஒரு சம்பவம் நடந்தது. பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, தங்க நகையை நூதன முறையில் திருடிய அக்கோயிலின் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். காணிக்கை எண்ணும் பணியின்போது, காலில் ரப்பர் பேண்டை வைத்து சுமார் 10 கிராம் எடை கொண்ட தங்க நகையை திருடினார். அப்போதே அவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

இதையும் படிங்க: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் நகை திருட்டு: இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details