காதலியின் நடத்தையில் சந்தேகமடைந்த காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை தென்காசி:கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் வந்த போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பெண்ணிற்கு 20 முதல் 25 வயதிற்குள் இருக்கலாம் என தெரிவித்த போலீசார், முகம் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்த அப்பெண் யார் என்ற தகவல் தெரியவில்லை என்று தெரிவித்தனர். பின்னர் அப்பெண்ணின் கையில் குத்தியிருந்த பச்சையை வைத்து, அப்பெண் யார்? எதற்காக இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது? பின்னணி என்ன? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தேவகோட்டை தாலுகா இருவாணி வயல் பகுதியில் உள்ள ஓர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். மாரிமுத்துவின் மகள் வினோதினி (வயது 19), இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்த மனோரஞ்சித் (வயது 22) என்ற நபருடன் பழகி, பின்னர் இவர்களது நட்பு காலப்போக்கில் காதலாக மலர இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்பெண் காதலன் நினைவாக தனது வலது கையில் எம்.வி என்று ஆங்கிலத்திலும், காதலை குறிக்கும் வகையில் 'ஹார்டின்' படமும் பச்சைகுத்தி காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலசை பகுதியில் நடைபெறும் திருவிழாவிற்கு தேவகோட்டையில் இருந்து வினோதினி வருவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இவர்கள் காதல் தெரிந்த பெற்றோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைத்துள்ளனர். அதைத் தெரிந்து கொண்ட மனோரஞ்சித் காதலியை மறக்க முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே குடும்பத்தினரும் நண்பர்களும் மனோரஞ்சித்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வினோதினியை திருமணமான பின்னும் மனோரஞ்சித் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வினோதினி தான் திருமணம் முடித்த கணவரை விட்டு விட்டு காதலுக்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு காதலன் மனோரஞ்சித்தை தேடி கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்திற்கு வந்துள்ளார்.
அதன் பின்னர் 5 நாட்களாக வினோதினி காதலன் மனோரஞ்சித்துடன் வலசை பகுதியில் சுற்றித்திரிந்துள்ளகாக தெரிகிறது. திடீரென இருவருக்கும் மத்தியில் காதல் மோதலாக மாறியுள்ளது. இதனால் தன்னை விட்டு விட்டு வேறு ஒருவரை திருமணம் முடித்ததையும், இன்னும் பல ஆண்களுடன் இன்ஸ்டாகிராமில் பழகியதையும் கூறி மனோரஞ்சித் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் காதலியின் நடத்தையில் சந்தேகமடைந்த மனோரஞ்சித், அது குறித்து தனது நண்பர்களான வலசை காலனி பகுதியைச் சேர்ந்த மகா பிரபு (வயது 22), பரத் (வயது 21), கடையநல்லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரிடம் கூறியுள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து வினோதினியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
அந்த திட்டத்தின் பேரில் தனது நண்பர்கள் உதவியுடன் காதலி வினோதினியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் சாக்கு முட்டையில் கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பயன்பாடு இல்லாத கிணற்றில் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் ஊரில் நடமாடிக் கொண்டிருந்துள்ளனர்.
சில நாட்களுக்கு பின்னர் கிணற்றிலிருந்து வினோதினி உடல் மிதக்கவும், ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் வினோதினி உடலை கைப்பற்றிய சம்பவம் தெரிந்ததும் மனோரஞ்சித், மணிகண்டன், மகா பிரபு ஆகியோர் கோயம்புத்தூருக்கு சென்று தலைமறைவாகி உள்ளனர்.
தற்போது இந்த கொலை சம்பந்தமாக தனிப்படை போலீசார் கடந்த 2 மாதத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் காணாமல் போன ஆயிரத்து 125 இளம் பெண்கள் விவரங்கள் மூலம் விசாரணை நடத்தி எந்தத் தடயங்களும் கிடைக்காமல் திணறி உள்ளனர். பின்னர் சேர்ந்தமரம் சாலை கண்மணிபுரம் மற்றும் வலசைப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்ததில், விலை உயர்ந்த புதிய பைக்கில் வினோதினியை வலசை கிராமத்திற்கு மனோரஞ்சித் அழைத்து வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் திடீரென வலசை கிராமத்தில் இருந்து மனோரஞ்சித் உட்பட 3 பேர் கோயம்புத்தூருக்கு சென்றது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜா, வேல் பாண்டியன், கருப்பசாமி ஆகியோர் கோயம்புத்தூர் சென்று பதுங்கி இருந்த 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர், மேலும் வலசை பகுதியில் இருந்த பரத் மற்றும் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் உட்பட 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: மான் வேட்டையாடிய 2 நபர் கைது... வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை!