தென்காசி: செங்கோட்டை அருகேவுள்ள பிரானூர் பார்டர் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில், 28 வயது பெண் ஒருவர் கணினி ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரை பணிக்கு வரும்படி ஷோரூமின் சூப்பர்வைசர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இன்று அப்பெண் காலையில் வழக்கம் போல் பணிக்குச் சென்றார். மதிய உணவு இடைவேளையின்போது அப்பெண்ணின் கணவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அவர் மயக்கத்தில் இருப்பது போல் பேசியிருக்கிறார். உடனே அச்சமடைந்த கணவர், சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அங்கு மனைவி மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக சம்பவம் குறித்து செங்கோட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.