தென்காசி: விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை பகுதியில் நகை விற்பனை தொழில் செய்து வந்தவர் செந்தில். இவருக்கு ஜூலை 05ஆம் தேதியன்று காலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்புகொண்டு, தன்னிடம் நகைகள் உள்ளதாகவும் அதனை பெற்றுக்கொண்டு பணம் தரக்கோரியுள்ளார்.
சடலமாக கிடந்த நகை வியாபாரி
இதையடுத்து, 3 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தனது காரில் சங்கரன்கோவில் சென்ற செந்தில், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் செல்போன் மூலம் தொடர்புகொண்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் செந்தில்லை பல இடங்களில் தேடினர்.
எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், செந்தில்லை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (ஜூலை 08) சங்கரன்கோவில் அருகே மலையன்குளம் பகுதியில் இருக்கும் குளத்தில் செந்தில் கழுத்து அறுக்கப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.