திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனியாக பிரிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் தனி மாவட்டமாக உதயமானது.
தென்காசி மாவட்டம் உதயமானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் பழைய பத்திரப்பதிவு அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் இடம் தேர்வு செய்து பணியில் ஈடுபட்டார்.
அரசுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் ஆயிரப்பேரி பகுதியில் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அது விவசாய நிலம் எனவும், அப்பகுதியில் பல மாடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவது உறுதித்தன்மையற்றது எனவும் திமுக சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஆயிரப்பேரி பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் ஆயிரப்பேரி பகுதியில் அமைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த திமுக ஆட்சியின்போது அப்பகுதியில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டடங்கள் கட்ட அந்த இடம் உறுதித்தன்மையற்றது என்பது ஆதாரமற்றது.
திமுகவினர் உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே அரசு தேர்வு செய்த ஆயிரப்பேரி பகுதியில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும்” என்றனர்.