சங்கரன்கோவிலில் குடிநீர் மீட்டரைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் விதமாகக் கடந்த ஆட்சியில் ரூ.545 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் வீடுகளுக்கு தனித்தனியாகக் குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் மீட்டர் பொருத்தி, தினசரி சீரான தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலமாக ஏராளமான குடும்பங்கள் தண்ணீர் பெற்றுப் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், சங்கரன்கோவில் மற்றும் ராமசாமியாபுரம் தெரு பகுதிகளில், வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மீட்டர் மற்றும் குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் மர்ப நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் குடிநீர் குழாய்கள் மற்றும் மீட்டார்களைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து, காவல்துறைக்குப் புகார் அளித்த நிலையில், இதுவரை திருடிய மர்ம நபர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதுகுறித்து காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் குழாய் மற்றும் மீட்டர் திருடப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக குடிநீர் குழாய்களைச் சரி செய்து தண்ணீர் வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:'ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் எனக்கு பெருமை' - நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்