கல்குவாரிக்கு எதிராக போராட்டம் செய்ய வந்த கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு தென்காசி:கல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி மலையில் ஏறி போராட்டம் செய்ய வந்த கிராம மக்களுடன், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரை புளியங்குடி காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சங்கரன்கோவில் அருகே உள்ள அரியூர் மலையடிவாரத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருவதாகவும், கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டு ஐந்து கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இம்மலையில் பெய்யும் மழையினால் இந்தப் பகுதியில் உள்ள ஐந்து குளங்களுக்கு நீர் வந்து சேரும். தற்போது செயல்படும் கல் குவாரியினால் குளங்களுக்கு நீர் வரத்து செல்வதும் தடைப்படும். இதன் காரணமாக கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க:Andhra Violence: டி.டி.பி, ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் மோதல்.. ஆந்திரா செல்லமுடியாமல் தமிழக பயணிகள் தவிப்பு!
இந்த நிலையில் இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அரியூர் மலையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மாலை 6:30 மணியளவில் மலையில் ஏறி போராடுவதற்காக ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனர்.
'அரியூர் மலை எங்கள் மலை, மலையை உடைக்க விட மட்டோம்' உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர். இந்தப் போராட்டத்தில் சிறுவர்களும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டக்காரர்களை புளியங்குடி டிஎஸ்பி அசோக் தடுத்து நிறுத்தினார். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனை புளியங்குடி டிஎஸ்பி கைது செய்தார். அப்போது அதனைக் கண்டித்து பிற வழக்கறிஞர்களும், கிராம மக்களும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டிய கிராம உதவியாளர் -வெளியான பகீர் ஆடியோ!