திருநெல்வேலி: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் அன்று பொதுமக்கள் வீடுகளில் பொங்கல் பானை வைத்து வழிபடுவது வழக்கம், எனவே பொங்கல் வைக்கப் பயன்படுத்தப்படும் வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சேலம், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகளவு உள்ளன. அந்த வகையில் தென்காசி மாவட்டம் ராயகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டு உள்ளனர்.
விவசாயிகளிடம் பெறப்படும் கரும்புகளை எந்திரத்தில் அரைத்து கரும்பு சாறு எடுத்து, சுத்திகரிக்கப்பட்ட அந்த கரும்பு சாறை பிரமாண்ட அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் இரும்பு கொப்பரையில் ஊற்றப்பட்டு சுமார் 2 மணி நேரம் தீயில் காய்ச்சப்படும். இறுதியாக உறைந்த நிலையில் தித்திக்கும் இனிப்புடன் மனம் வீசும் சுவையான வெல்லம் தயாராகிறது. பின்னர் சுடச்சுட கையால் உருட்டி தொழிலாளர்கள் வெல்லம் உருண்டை பிடிக்கின்றனர்.
இதற்காக, விவசாயிகளிடம் டன்னுக்கு 2,000 முதல் 2,200 ரூபாய்க்கு கரும்புகள் வாங்கப்படுகிறது. ஒரு டன் கரும்பில் சுமார் 100 கிலோ வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம், வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆலைகளில் திருப்பூர் போன்ற வெளி மாவட்ட தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்துடன் தங்கி வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் இந்தாண்டு வெல்லம் இடம் பெறாததால் வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் பொங்கல் தொகுப்பில் வெல்லம் முக்கிய இடம் பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வெல்லம் இடம்பெறவில்லை. ஏற்கனவே போதிய விலை இல்லாததால் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வெல்லம் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.