தென்காசி: மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களாகவே பல்வேறு இடங்களில் அதிகமாகவே தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. மேலும் இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அரசு அதிகாரிகளிடத்திலும் ஊர் கிராம மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கடையம் பகுதியில் தண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான பெண்களும் மற்றும் ஊர் பொதுமக்களும் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று தென்காசி மாவட்டம் முழுவதுமாக தண்ணீர் பிரச்சினை அதிகமாகவே நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு பணவடலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய குடிநீர் தேவைக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வடக்கு பணவடலி, பணவடலிசத்திரம், சொக்கலிங்கபுரம், திருமலாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு குடிநீரானது வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த ஒரு மாத காலமாக திருமலாபுரம் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்தும் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்தும் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர்.