தென்காசி மாவட்டம் கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கருப்பாநதி நீர்த்தேக்கம் 72 கன அடி கொண்டது. கருப்பா நதி அணையின் கீழ் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் மூலம் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் என்று மொத்தம் 9,514.70 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பிசான சாகுபடிக்கு கருப்பாநதி அணையில் இருந்து 30-9-2022 முதல் 26-2-2023 வரை 150 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதம் 1,189.34 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையின் மூலம் வைரவன்குளம், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம், போகநல்லூர் உள்ளிட்ட 14 கிராமங்கள் பயன் பெறுகிறது. கருப்பாநதி அணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு அணையினை திறந்து வைத்தனர்.