தென்காசி மாவட்டம் கடையம் அருகேவுள்ள சிவசைலத்தில் காந்தி கிராம அறக்கட்டளையின் கிளை நிறுவனமான ஒளவை ஆசிரமம் உள்ளது. இங்கு குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டு அவர்கள் முன்னேற்றத்திற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேலும், கிராமப்புற பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அரசின் சுற்றுச்சுழல் துறை மூலமாக தையல் பயிற்சி மற்றும் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டமானது கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதோடு இப்பகுதியில் மிகுதியாக பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு மாற்றுத் தொழிலாகவும் விளங்குகிறது.
நெல்லை தனியார் தொண்டு நிறுவனம் இந்நிலையில் 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இல்லந்தோறும் வருகிற 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. அதற்கு பல்வேறு பகுதிகளில் மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தனியார் நிறுவனத்தின் உதவியுடன் காந்திகிராம கதர் அறக்கட்டளை கதர் துணியிலான தேசிய கொடிகளை தயாரித்து இலவசமாக வழங்க திட்டமிட்டது. சிவசைலம் ஒளவை ஆசிரம வளாகத்தில் செயல்பட்டு வரும் தையல் உற்பத்தி மையத்தில் பயிற்சி பெற்ற கிராமப்புற பெண்கள் உதவியுடன் தேசியக்கொடி தைக்கப்பட்டு, கொடியின் நடுவில் வரும் அசோகச்சக்கரம் அச்சிடப்பட்டு வருகிறது.
நன்கு பயிற்சி பெற்ற இளம் பெண்கள் உள்பட 20 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 5 ஆயிரம் தேசிய கொடிகள் தயாரித்து வருகின்றனர். இந்த கொடிகள் சிவசைலம் ஊராட்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திகிராமம், தொப்பம்பட்டி, ஆலமரத்துப்பட்டி மற்றும் செட்டியப்பட்டி ஆகிய ஐந்து கிராம பஞ்சாயத்துக்களில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. நாட்டின் 75ஆவது சுதந்திரதின விழா கொண்டாடும் இந்த வேளையில் இலவசமாக தேசிய கொடி தைத்து கொடுக்கும் ஒளவை ஆசிரமத்தின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:தேசியக்கொடி ஏற்றும் உரிமையை இழந்து தவிக்கும் ஊராட்சித் தலைவர்கள்; ஆட்டிப்படைக்கும் ஆதிக்க வர்க்கம்!