நெல்லை- செங்கோட்டை மின்சார ரயில் சேவை தொடக்கம் தென்காசி:மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு ரயில்வே வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணியானது நடைபெற்று வந்தது. முதற்கட்டமாக விருதுநகர் - நெல்லை வழித்தடத்தில் அகலப்பாதை மற்றும் மின்சார அமைத்து பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டை - நெல்லை இடையேயான சுமார் 72 கிலோ மீட்டர் தூர ரயில்வே வழித்தடத்தில், மின்மயமாக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மின்மயமாக்கும் பணி நிறைவு பெற்று நெல்லை - தென்காசி இடையே மின்சார ரயில் இன்ஜினை பொருத்தி சோதனை ஓட்டமானது நடைபெற்றது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், செங்கோட்டை-நெல்லை இடையே மின்சார ரயில் இன்ஜினை பொருத்தி ரயில் சேவையை தினந்தோறும் இயக்குவதற்காக ரயில்வே நிர்வாகதிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதனால் நேற்று (அக்-18) முதல் செங்கோட்டை- நெல்லை இடையேயான பயணிகள் ரயிலில் சேவை தொடங்கியுள்ளது.
இந்த ரயில் நெல்லை டவுன், பேட்டை சேரன்மாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்றது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி தற்போது நிறைவு பெற்று மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளதால், பயண நேரம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:"இனி 234 தொகுதியும் எங்க லியோ ஆட்சி தான்" - விஜய் ரசிகர்கள் பேனர்.. கோவையில் போலீஸ் கெடுபிடி!