தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மற்றும் அன்னத்தாய் தம்பதியினருக்கு மணிபாலன்(வயது 25) என்ற மகனும், சுந்தரி (வயது 23)என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணசாமி என்பவர் அதே பகுதியில் தச்சுப்பணி செய்து வருகிறார். அவரது மனைவி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது, மகன் மணிபாலன் பத்தாம் வகுப்பு படித்து முடித்து உள்ளார். மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு மணிபாலனுக்கு நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிபாலன் கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் நிறுவனமான கானா டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகி உள்ளார்.
அப்போது அந்நிறுவனமானது வெளிநாட்டில் ஜெனரேட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறது எனவும், பதிவு செய்வதற்கு முன்பணம் ரூ.80ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிபாலன் கேரளா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு 80 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியதாக சொல்லப்படுகிறது.
பின்னர், அந்நிறுவனம் டூரிஸ்ட் விசா மூலம் மூன்று மாத கால அவகாசத்தின்படி, கடந்த ஜூலை 25 ஆம் தேதி சவுதி அரேபியாவுக்கு ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு மணிபாலனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. மணிபாலன் தொடர்ந்து நான்கு மாதங்களாக சவுதி அரேபியாவில் ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் பணியில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நான்கு மாதங்கள் ஆகியும், மணிபாலனுக்கு உரிய சம்பளத் தொகை வழங்கப்படவில்லை எனவும், தனது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் தவிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மணிபாலன் தான் வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்திடம் எதற்காக எனக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கேள்வி எழுப்பிய பொழுது, உனக்கெல்லாம் சம்பளம் கொடுக்க முடியாது. நீயும் உன் நாட்டிற்கு செல்ல முடியாது என்றும், அதை மீறி போக நினைத்தால் உன்னை அழித்து விடுவோம் என்று மிரட்டியதாக தெரிகிறது.