தென்காசி:தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள், திருநங்கைகளை அவமதிப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் நேரலையில் ஈடுபட்ட திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்திற்கு 11 மணி அளவில் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். ஆனால், கூட்டம் ஒரு மணி அளவில் துவங்கப்படாத நிலையில், திருநங்கைகள் தங்கள் மொபைலில் சமூக வலைதளங்களில் நேரலையில் தாங்கள் அவமதிக்கப்படுவதாகவும், தங்களுக்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், சமூக நலத்துறை சார்பில் தங்களுக்கு எந்தவித முகாம்களும் முறையாக நடத்தப்படுவதில்லை, தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் அலட்சியம் செய்யும் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூட்டத்திற்கு வரச்சொல்லி தங்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என சமூக வலைதளங்களில் நேரலையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறைதீர்க்கும் முகாமில் சமூக நலத்துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டது திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அறிந்த அதிகாரிகளை கடிந்து கொண்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் உடனடியாக பங்கேற்று திருநங்கைகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.