தென்காசிமாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைத் திறந்து வைத்ததுடன் அங்கிருந்த அரங்கு காட்சிகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் 478 பயனாளிகளுக்கு 35 கோடியே 68 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிற்கு புதிய வர்ணங்கள் பூசப்பட்டு வளாக சாலைகளில் மணல்களை நிரப்பிச் சமப்படுத்தப்பட்டது.
ஆட்சியர் அலுவலக நுழையு வாயில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களால் அலங்கரிக்கப்பட்டுக் கூடுதலாக அலங்கார வளைவில், முதலாவதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படமும் அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இரண்டாவதாகவும், கடைசியாக முதலமைச்சர் ஸ்டாலின் படமும் வைக்கப்பட்டு இருந்தது.