மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடி: ஆட்சியரிடம் பெண்கள் மனு - தென்காசி மாவட்ட செய்திகள்
தென்காசி: கரோனா ஊரடங்கு காலத்தில் நுண் நிதி நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்த சொல்லி மிரட்டுவதாகக் கூறி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
![மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடி: ஆட்சியரிடம் பெண்கள் மனு பெண்கள் மனு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:35:47:1600859147-tn-tki-01-micro-finance-women-protest-7204942-23092020142237-2309f-00974-752.jpg)
தென்காசி மாவட்டத்தில் சுரண்டை, ஆலங்குளம், செங்கோட்டை, தென்காசி, கணையம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்த நிதி நிறுவனங்களிடம் சுய உதவிக்குழு பெண்கள் கடன் பெற்று அதனை மாதத் தவணை முறையில் செலுத்திவருகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நபர்கள் வருவாய் இழந்து தவித்துவரும் நிலையில் கடனைத் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி நிறுவனங்கள் கடனை செலுத்த கூறி மிரட்டி வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கடையம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் நிதி நிறுவனங்கள் அடாவடியாக பண வசூலில் ஈடுபடுவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், நுண் நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி கரோனா காலத்தில் சுய உதவிக்குழு பெண்களிடம் அடாவடியாக ஆபாசமாக பேசி, தற்கொலைக்கு தூண்டும் வகையில் கட்டாய வசூல், கட்டாய அபராத வட்டி செய்துவருகிறார்கள்.
எனவே கடன் வசூல் செய்யும் காலத்தை ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் எனவும் கடுமையாக பண வசூலில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.