தென்காசிமாவட்டம், கடையநல்லூர் அடுத்து நெடுவயல் ஊராட்சி தலைவராகவும் பாஜக ஒன்றிய பொருளாளராகவும் முப்புடாதி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 25ம் தேதி இந்த ஊராட்சியில் எழுத்தராக பணிபுரியும் மாரிமுத்து என்பவருக்கும், முப்புடாதிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மாரிமுத்துவை முப்புடாதியின் மகன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், அச்சன்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி எழுத்தர் மீது புகார் அளிப்பதற்காக முப்புடாதி மற்றும் அவரின் மகன் மற்றும் பாஜக பிரமுகர்கள் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அங்கு இருந்த திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.