தென்காசி: கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடியில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது 49 சிறைவாசிகளை விடுதலை செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28ஆம் தேதி ஆளுநரைக் கண்டித்து, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "காவிரி நதிநீர் பிரச்னையில் இரண்டு கட்சிகளுமே முழுவதுமாக பிரச்னையைத் தீர்க்கவில்லை. ஆனால், தற்போது தமிழக முதலமைச்சர் காவிரி நதிநீர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்க வேண்டும். அதற்கு மனிதநேய மக்கள் கட்சி துணை நிற்கும்" என்று அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏராளமான கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். ஆனால், மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் பிரசவ காலங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதை சரி செய்ய வேண்டும்" என கூறினார்.
மேலும், "இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். இதுமட்டுமல்லாது இந்த புளியங்குடியைச் சுற்றிலும் சுமார் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால், புளியங்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்னையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும்.