தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சுப்ரமணியன் (49). இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 3ஆம் தேதி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவரை கரோனா பரிசோதனைக்கு மருத்துவர்கள் உட்படுத்தியபோது, தொற்று (செப்.4) இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
மூன்று நாட்கள் மட்டும் தொடர் சிகிச்சை அளித்துவிட்டு, செப்டம்பர் 6ஆம் தேதி ராஜா சுப்பிரமணியனை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையில் வீட்டிற்குச் சென்ற பிறகும், அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் அதிகமானதால் தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று (செப்.09) அவரது உடல் நிலை மோசமானதால் நெல்லை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை(செப்.10) ராஜா சுப்பிரமணியன் உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபரை முழுமையாக குணமடையும் வரை சிகிச்சை அளிக்காமல், அரசு மருத்துவர்கள் அலைக்கழித்ததால் தான் ராஜா சுப்பிரமணியன் இறந்து விட்டதாக, உறவினர்கள் குற்றம்சாட்டினர். கரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபரை மூன்று நாள்களில் வீட்டுக்கு அனுப்பியது ஏன்? உண்மையாகவே அவருக்கு கரோனா இருந்ததா அல்லது கரோனா இல்லாமலேயே இருப்பதாகக் கூறி, சிகிச்சை அளிக்கப்பட்டதா என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.