தென்காசி:கல்லூரி மாணவியை மூன்றாவதாக திருமணம் செய்து ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றி வந்த நபரை பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (வயது 27). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை தனியார் கல்லூரியில் படித்து வந்த போது அடிக்கடி ரயிலில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதே ரயிலில் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் மகன் அருள்ராயன் (வயது 40) என்பவர் பயணம் செய்து வந்துள்ளார்.
இந்த பயணத்தில் அருள்ராயன் தன்னை ஒரு விஜிலென்ஸ் அதிகாரி என காயத்ரியுடன் அறிமுகம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் நட்பாக மாறி, பின்பு காதலாகி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் மதுரையிலேயே திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனியாக வீடு எடுத்து மதுரையிலும், திருமங்கலத்திலும் இரண்டு ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையில் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அருள்ராயனிடம் காயத்திரி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பல வேலை அலப்பறையைக் காட்டியும், தன்னை அதிகாரி போல காட்டிக் கொண்டும் பல விதத்தில் காரணங்களை கூறி அருள்ராயன் தட்டிக் கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாட்கள் செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு காயத்ரியை சமாதானம் செய்து அவரது சொந்த ஊரான பட்டாகுறிச்சியில் அருள்ராயன் குடும்பம் நடத்தி உள்ளார். இதற்கிடையில் மாதத்திற்கு நான்கு நாட்கள் காயத்ரி வீட்டிற்கு வந்து போவதை வழக்கமான ஒன்றாக வைத்து இருந்துள்ளார் அருள்ராயன்.
இதையும் படிங்க: தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்.. நடந்தது என்ன?
இந்த நிலையில் உண்மையிலே இவர் விஜிலன்ஸ் அதிகாரிதானா என காயத்ரியின் குடும்பத்தாருக்கு சந்தேகம் வரவே, அருள்ராயனின் சொந்த ஊரான சுந்தரநாச்சியாபுரம் பகுதியில் சென்று விசாரித்து உள்ளனர். அப்போது அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடைபெற்றதாக அக்கம் பக்கத்தில் கூறியதை கேட்டு காயத்திரி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அவர் விஜிலென்ஸ் அதிகாரி இல்லை எனவும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த பெண் வீட்டார் இது குறித்து அருள்ராயனிடம் விபரம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் காயத்ரியின் தந்தை எட்டு லட்ச ரூபாய் தன்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு அருள்ராயன் ஏமாற்றி விட்டதாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த புகாரின் அடிப்படையில் புளியங்குடி காவல்துறையினர் இரு தரப்பையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து உள்ளனர். இரு தரப்பும் வந்த நிலையில அருள்ராயன், காயத்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி காயத்ரி, புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில் அருள்ராயன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் காயத்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும் தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவியை மூன்றாவது திருமணம் செய்து ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றி வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்.. வீட்டுக்குள் நுழைந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்..