தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக பொதுக்கூட்டத்தில் தீக்குளிப்பேன் - மிரட்டல் கடிதம் எழுதிய யூனியன் சேர்மன் - தென்காசி செய்திகள்

தென்காசி மாவட்டம், கடையம் யூனியன் சேர்மனாக உள்ள செல்லம்மாள் என்பவர் திமுக பொதுக்கூட்டத்தில் தீக்குளிக்கப் போவதாக எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 17, 2023, 2:44 PM IST

தென்காசி:கடையம் யூனியன் சேர்மன் மக்கள் பணி செய்யவிடவில்லை, கட்சியிலும் மரியாதை இல்லை, திமுக பொதுக்கூட்டத்தில் தீக்குளிக்க போவதாக எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் சேர்மனாக செல்லம்மாள் என்பவர் இருந்து வருகிறார். இவர் தற்போது தலைமைக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், 'ஒவ்வொரு யூனியன் கூட்டத்திலும் தன்னை மட்டம் தட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அரசு ஒப்பந்ததாரர் ஆகியோர் தன்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் துன்புறுத்தி வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கவுன்சிலர்களிடமும் மரியாதை இல்லை எனது கணவர் 35 ஆண்டு காலமாக கட்சிக்காக போஸ்டர் ஒட்டுவது முதல் அனைத்து பணிகளையும் செய்தவர், மேடை பேச்சாளர், கிளை செயலாளர் என தகுதி இருந்தும் மதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலே பைக்கில் செல்லும் ஒன்றிய குழு தலைவர் நானாக தான் இருப்பேன். என்னுடைய ஒன்றியம் எனது வார்டில் நடைபெறுகிற பொதுக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பும் இல்லை; பெயர் போடவும் இல்லை. அந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளேன்.

இதனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே, நடைபெறுகிற பொதுக்கூட்ட மேடையிலே எங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ள மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து நானும் எனது கணவரும் தீயிட்டு கொளுத்தி கொள்கின்றோம்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தில் இருந்து யூனியன் சேர்மனாக உள்ள பெண் ஒருவர், தன்னை அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் இருந்து புறக்கணிப்பதாகவும் கூறி திமுக பொதுக்கூட்டத்தில் தீக்குளிக்க போவதாக அக்கட்சியின் தலைமைக்கு எழுதிய கடிதத்தால் மேலும் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீட்டு கேட்டு ரூ.1 கோடி பேரம்? - ஓபிஎஸ் ஆதரவாளர் புகார்; கே.பி.முனுசாமி புதிய விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details