தொடர் கனமழையால் அச்சன்கோவில் மலைப்பாதையில் நிலச்சசரிவு தென்காசி: தமிழகம் எங்கும் பருவமழை பெய்து வரும் நிலையில், தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளை ஒட்டியுள்ள நீர் வீழ்ச்சிகளில், மழைநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், ஆங்காங்கே சில பகுதிகளில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மேக்கரை பகுதியில் நேற்று (டிச.5) ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கனமழை காரணமாக மேக்கரை - அச்சன்கோவில் இடையேயான நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டு இருந்தது.
அந்த வகையில், மேக்கரை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால் அச்சன்கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள 7வது வளைவில் பாறாங்கற்கள், மண் உள்ளிட்டவை சரிந்து சாலையில் விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதனை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ள காரணத்தினால், மலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:நெம்புலி ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீரால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை!