தென்காசி மாவட்டம்கடையம் அருகே சம்பன்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் - முத்துலட்சுமி தம்பதி. இவர்களுக்கு சரவணன் (14), சக்திவேல் (12) என இரண்டு மகன்களும், முத்துமாரி (8) என்ற மகளும் உள்ளனர். முருகன் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகன் சரவணனுக்கு சிறு வயதிலுருந்து இருதய கோளாறு இருந்துவருகிறது. 2010ஆம் ஆண்டு சரவணனின் இருதயத்தில் ஓட்டை இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஆனால், இப்போது சரவணனுக்கு மாற்று இருதயம் பொறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது தவிக்கும் கூலி தொழிலாளியான முருகன், தனது மகனின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அறுவை சிகிச்சையே தனது வருமானத்தை மீறி சுமார் 10 லட்சம் வரை செலவு செய்த முருகன், அறுவை சிகிச்சைக்குப் பின் மாதம் ரூ.6 முதல் 8 ஆயிரம் வரை மருத்துவ செலவு செய்து தனது மகனை காப்பாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மாற்று அறுவை சிகிச்சைக்கு வழி இல்லாமல் பரிதவித்து வருகிறார். இதனால் தனது மகனின் உயிரை காப்பாற்றுமாறு, தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தர்மபுரமட ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் முருகன் இல்லத்திற்கு சென்று மாத்திரைகளை வழங்கினார்.