தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகள் அமைந்துள்ளன. தென்மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். சீசன் காலங்களில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.
அவ்வாறு குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கழிவு பொருள்களை அங்கேயே விட்டுச் செல்வதால் அதன் தரத்தை சீரழிப்பதாகவும், மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கறிஞர் டிஎஸ்ஆர் வெங்கட்ரமணாவை வழக்குறிஞர் ஆணையராக நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
அதன்படி குற்றாலம் பிரதான அருவி அருகே கழிவுநீர் கலக்கிறது, சுற்றுலாவாசிகள் அருவியின் அருகே மது அருந்துகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிமன்றம் குற்றாலத்தில் எண்ணெய், ஷாம்பு, சோப்பு, சீயக்காய், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் விற்க தடை விதித்து 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், குற்றாலம் பொலிவு பெற்று காட்சியளித்தது. தற்போது நீடித்துவரும் கரோனா ஊரடங்கால், குற்றாலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கும், இதமான சூழலையும் பொதுமக்கள் யாரும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மக்களின் வருகை இல்லாததால் குற்றால அருவிகள் மாசுபாடின்றி சுத்தமாக காட்சியளிக்கிறது. ஊரடங்கு இல்லாத காலங்களில் இதே நிலை தொடருமா என்பதே கேள்விக்குறிதான்.