தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரவாரமில்லாத குற்றால சீசன் நிறைவு - கரோனாவால் ரூ.100 கோடி இழப்பு - tenkasi

தென்காசி: தென்றல் காற்றும், சாரல் மழை வீசும் குற்றால அருவிகளில், சீசன் களைகட்டியும் கரோனா முடக்கத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி ரூ.100 கோடி வரை வருவாய் இழப்போடு குற்றால சீசன் நிறைவடைகிறது.

kutralam
kutralam

By

Published : Oct 5, 2020, 3:08 PM IST

Updated : Oct 14, 2020, 7:45 PM IST

பசுமைவெளி போர்த்திய மலைத்தொடரும், மூலிகைப் புதர்களும், அடர்ந்த வனங்களும், அரிய வகை விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்த 14 நகரங்களில் குற்றாலமும் ஒன்று. குற்றால மலையின் உச்சியில் மூன்று சிகரங்கள் இருப்பதால் இதனை திரிகோண மலை என்றும் அழைப்பார்கள். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

இவற்றில் ஐந்தருவிகளில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர். மற்றவை வனப்பகுதிக்குள் இருப்பதால் குளிக்க அனுமதி கிடையாது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தென்றல் காற்றும், சாரல் மழையும் சுற்றுலாப் பயணிகளை குதூகலிக்கச் செய்யும். கோடைகாலத்தின் கத்திரி வெயில் முடிந்ததும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சாரல் மழையினால் குற்றால அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும்.

சீசன் காலத்தில் இந்த அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆரவாரத்துடன் குளித்து மகிழ்வார்கள். விடுமுறை நாள்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் குற்றாலமே விழாக்கோலம் போல் காட்சியளிக்கும். குளுகுளுவென வீசும் தென்றல் காற்று, கீதமாய் ஒலிக்கும் மெல்லிய சாரல் மழை, வானை இருள செய்யும் மேகக் கூட்டம், மூலிகை நறுமணம் கொண்ட தண்ணீரில் குளித்து மகிழ்வதே ஒரு சுகம் தான்.

குறிப்பாக, தமிழ் மாதங்களான கார்த்திகை, தை மாதங்களில் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து குதூகளித்து செல்வார்கள். ஓராண்டில் ஐந்து மாதம் களைகட்டி காணப்படும் குற்றாலம், மற்ற ஏழு மாதங்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் களையிழந்து காணப்படும். இந்த ஆண்டும் சீசன் தொடங்கிவிட்டது. சாரல் மழை பெய்து அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் மழை சாரலில் குளிக்கத்தான் யாருமில்லை.

உலகையே அச்சுறுத்திய கரோனா, குற்றாலம் சீசனையும் புரட்டி போட்டுள்ளது. எப்போதுமில்லாத அளவிற்கு மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது, குற்றாலம். இந்த மூன்று மாத சீசன் காலகட்டத்தை நம்பி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கரோனா பொதுமுடக்கத்தால் இவர்களது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

குற்றாலத்தில் உள்ள விடுதிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே வருவாய் ஈட்ட முடியும். மீதமுள்ள மாதங்களில் செயல்படாத நிலையிலேயே இருக்கும். அதேபோன்று இங்கு விளையும் மூலிகை பொருள்கள், அரியவகை பழவகைகள் என அனைத்தும் வியாபாரமாகததால் சாலை வியாபாரிகளும் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றியமைக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

குற்றாலத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. படகு சவாரி ஆகியவை செயல்படாததால் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். சராசரியாக ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட இயலும். அவர்களும் வருவாய் இழந்துள்ளனர்.

இவ்வாறு கடைகளை ஏலம்விடுதல் தொடங்கி விடுதிகள், உணவகங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள் அனைவரின் மூலம் மொத்தம் 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படும். இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளை காணாமலேயே குற்றாலம் சீசன் நிறைவடைய உள்ளது.

இந்த வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு வியாபாரிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்: வலுக்கும் எதிர்பார்ப்பு... நெருங்கும் அறிவிப்பு நாள்!

Last Updated : Oct 14, 2020, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details