தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாறு அணை 36.10 அடி கொள்ளளவு கொண்டுள்ளது.
இந்த அணை மூலம் ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், செங்கோட்டை நகரின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை திகழ்கிறது.
கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அணைக்கு 31 கனஅடியாக நீர்வரத்து உள்ள நிலையில், இந்த நீர் அனைத்தும் வெளியேற்றப்படுவதால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கார் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.