சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
தமிழ்நாடு-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புளியரையில் உள்ள கேரள மாநில எல்லை, கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு-கேரள காவல் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருவனந்தபுரம் காவல் துறை மண்டலத் துணைத் தலைவர் (டிஐஜி) சஞ்சய் குமார் குர்தீன், கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஷ் சங்கர், தமிழ்நாடு சார்பில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுக்னாசிங், காவல் துணை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு-கேரள காவல் துறை ஆலோசனைக் கூட்டம் இதில், கரோனா தடுப்பு நடவடிக்கையில் இருமாநில அலுவலர்களும் இணைந்து செயல்படுவது, மாநில எல்லையில் ஊரடங்கு உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிப்பது, 144 தடை உத்தரவு காரணமாக மாநில எல்லைகள் மூடப்பட்டாலும் காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்களை மட்டும் அனுமதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:ஆட்டோ ரிக்ஷா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; ஐவர் படுகாயம்!