கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள், பூக்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படும்.
ஆனால் கேரளாவில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழ்நாட்டிலிருந்து செல்லக்கூடிய அத்தியாவசிய பொருள்களின் ஏற்றுமதியில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு கேரள முதலமைச்சர் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூக்களை உபயோகப்படுத்த வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவாக அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பூக்கள் விற்பனையில் சற்று மந்த நிலையில் ஏற்பட்டது. காய்கறியை பொருத்தவரை திருநெல்வேலி, தென்காசி, சுரண்டை போன்ற பகுதியில் இருந்து டன் கணக்கில் கடந்த வருடம் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இந்த வருடம் வைரஸ் தொற்றால் எதிர்பார்த்த அளவுக்கு காய்கறிகள் விற்பனை ஆகவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் விலையைப் பொறுத்தவரை கேரள மக்கள் உபயோகப்படுத்தும் சாம்பார் வெள்ளரி காய், பயர், வெண்டைக்காய், புடலங்காய், தடியங்காய், மாங்காய் பூசணிக்காய், கத்தரிக்காய், தக்காளி பழம் போன்ற காய்கறிகள் அதிக படியாக உபயோகப்படுத்துவதால் அந்த காய்கறிகள் மட்டும் விலை உயர்ந்து காணப்படுகிறது.
மற்ற காய்கறிகள் எதிர்பார்த்த அளவுக்கு விலைவாசி இல்லாததால் சற்று கவலையடைந்துள்ளனர். மேலும் இந்த நோய் தொற்று காரணமாக கடந்த வருடம் போல் இந்த வருடம் காய்கறி ஏற்றுமதி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், தக்காளி 20 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 20 ரூபாய்க்கும், மிளகாய் 35 ரூபாய்க்கும், மாங்காய் 45 ரூபாய்க்கும், புடலைங்காய் 18 ரூபாய்க்கும், பயர் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.