கேரள குண்டு வெடிப்பின் எதிரொலியாக புளியங்குடி சோதனைச் சாவடியில் உஷார் நிலை தென்காசி: எர்ணாகுளம் மாவட்டம், களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டரங்கு இன்று (அக். 29) காலை நடைபெற்றது. இந்த விழிபாட்டு கூட்டரங்கில் பலர் கலந்து கொண்ட நிலையில், இதில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. யாரும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 36க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயன் இடம் கேட்டு அறிந்துள்ளார். மேலும், குண்டு வெடிப்பு நடைபெற்ற இடம் சீலிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கேரளா தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள காவல்துறையினர் மற்றும் என்ஐஏ குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
அதில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது, மத வழிப்பாட்டு பொதுக் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு, நீல நிற கார் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு அந்த கார் அப்பகுதியில் இருந்து வெளியே சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து, குண்டு வெடிப்பின் எதிரொலியாக, தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அந்த வகையில், தென்காசி மாவட்டம் தமிழ்நாடு - கேரள எல்லை பகுதியான புளியங்குடி சோதனை சாவடியில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில், தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், புளியரை சோதனைச் சாவடியில், அதிகமாக வாகனங்கள் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுவதால், அங்கு காவல்துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். மேலும், மாவட்ட எல்லைகளில் காவல்துறையால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் மிகுந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது. தற்போது நடைபெற்று வரும் வாகன சோதனையில் புளியரை மற்றும் செங்கோட்டை காவல் நிலையம் ஒன்றிணைந்து, மெட்டல் டிடெக்டர் மற்றும் எஃப் ஆர் எஸ் (FRS- Face recognition software) எனப்படும் செயலி மூலம், வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளை சோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கேரளா குண்டுவெடிப்பு: சிசிடிவி காட்சியில் சிக்கிய நீல நிறக் கார்! என்.ஐ.ஏ. தீவிர விசாரணை!