தென்காசி: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளை பிடிக்க உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவியது.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்கள் பலர் உறுப்பினர்களிடம், பேரம் நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் சில உறுப்பினர்கள் தலைவர் பதவியை பிடிக்க சக உறுப்பினர்களை இன்பச் சுற்றுலா அனுப்பிய சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில் அதே தென்காசி மாவட்டத்தில் தற்போது ஆளும் கட்சி மாவட்ட செயலாளர் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக வீடியோ வெளியிட்ட யூனியன் பெண் சேர்மன் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதாவது தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றிபெற்றனர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு நடந்த மறைமுகத் தேர்தலில் 10ஆவது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் 13 ஓட்டுகள் பெற்று ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக (யூனியன் சேர்மன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திமுகவின் நெருக்கடியால் ராஜினாமா அவரை எதிர்த்து போட்டியிட்ட 13ஆவது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுக சார்பில் ஜெயக்குமாரையே ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பப்படுள்ளது.
ஆனால் கடையம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் என்பவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி செல்லம்மாளை வெற்றிபெற செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக குமாரை ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து திமுக தலைமை நீக்கியது தொடர்ந்து, சேர்மன் பதவியில் அமர்ந்த செல்லம்மாளிடம் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் சேர்மன் செல்லம்மாள் கூறியதாவது, “மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் என்னிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் கேட்கிறார், பணத்தை தர முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்யும்படி கூறினார்.
நான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள். ஒரு கோடி ரூபாய்க்கு நான் எங்கே போவேன். மூன்று தவணையாக பணத்தை கொடுக்கவா என்று கேட்டால், ஒரே நொடியில் பணத்தை வைத்து விட்டு பதவியில் இரு இல்லாவிட்டால் ராஜினாமா செய் என்கிறார்” என்றார்.
செல்லம்மாள் பேசியிருந்தார் இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில மணி நேரத்தில் செல்லம்மாள் தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹெலனை நேரில் சந்தித்து தனது சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் மூலம் மாவட்ட செயலாளரின் மிரட்டலுக்கு பணிந்து தான் செல்லம்மாள் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கடையம் ஊராட்சி ஒன்றியம் இம்முறை தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால், அச்சமூகத்தைச் சேர்ந்த செல்லம்மாள் சேர்மன் ஆக தேர்வு செய்யப்பட்டார். பிற கட்சி நிர்வாகிகள் போல் இல்லாமல் செல்லம்மாள் போதிய பண பின்புலம் இல்லாத நபர் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்த விவசாயிகள்