மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. உண்மையிலேயே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் இருந்திருந்தால், அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்றும், தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்தச் சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளதாகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ளது, ஆனையூர் கிராமம். இங்கு வசிக்கும் பெரும்பான்மையான முக்குலத்தோர் சமூகத்தினர், தங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்காததைக் கண்டித்தும், குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்தும் பெண்கள், மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.