தென்காசி: தென்காசி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தென்காசி நகராட்சிக்கு உட்பட்டு ஏராளமான பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தினசரி குப்பை அள்ளுவது வழக்கம். தென்காசி மாவட்டம் உருவாகி 4 வருடங்கள் ஆன நிலையில், இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு தெருக்களிலும், வார்டு பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் அவ்வப்போது நடைபெறுவதாகத் தெரிகிறது.
இந்த பணிகள் சரியான முறையில் நடைபெறாததால் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் குறைகளுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில், இன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள 10வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகளை அள்ளாமல் நகராட்சி ஊழியர்கள் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த அலட்சியத்தால் தங்கள் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளதால் தினசரி குப்பைகளை அள்ள வேண்டும் என அந்தப் பகுதிகளின் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேநேரம், இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நகராட்சி வார்டு கவுன்சிலர் முஹம்மது ராசப்பா (சுயேட்சை) என்பவரிடம் புகார் தெரிவித்து உள்ளனர். அவரும் நகராட்சி அதிகாரிகளை அணுகி குப்பைகளை அள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
இருப்பினும், அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், அந்த வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினரான முகம்மது ராசப்பா ஆத்திரம் அடைந்து உள்ளனர். இதனால் முகம்மது ராசப்பா அவரது வார்டு பகுதியில் உள்ள குப்பைகளை அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து அள்ளி மூட்டை கட்டி நகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்து நகராட்சி அலுவலக வாயில் முன்பு போட்டு, கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.