தென்காசி: தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது, குற்றாலம். இது தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் சீசன் தற்போது களைகட்டத் தொடங்கி உள்ளது.
மேலும், மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வார விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, வார நாட்களிலும் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் தென்காசியில் கடந்த இரண்டு தினங்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகின்றது. இதனால் மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மேலும், பெண்கள் பகுதியில் அபாய வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் ஆண்கள் பகுதியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 24) மாலைப்பொழுதில் அதிகப்படியாக மழை பெய்ததால் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி இல்லாமல் இருந்தது.
ஆனால், இன்று (ஜூலை 25)காலை முதல் சாரல் மழை உடன் அதிகப்படியாக மழை பெய்து வருவதால் ஆண்கள் பகுதியில் அருவியின் நடுப்பகுதி வரைக்கும் செல்லவிடாமல் ஓரமாக நின்று குளிக்க காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.